Sunday, July 11, 2010

அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!! 

1980 களில், அந்த தெருவிலேயே அடிபம்பு இருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில் என் அம்மாவின் வீடும் ஒன்று. குடிநீருக்கு குழாயில் வரும் நீரும், குளிக்க, துணி துவைக்க தெருக்கோடியில் ஓடும் தாமிரபரணியின் கிளை வாய்க்காலும் போதுமானதாக இருந்தது.
மேல் தேவைகளுக்கும்,கோடையில் வாய்க்கால் வற்றும்போதும், அம்மா வீட்டில் வளவூட்டில் (முற்றத்தில்) இருக்கும் அடிபம்புதான் அந்த தெருவுக்கே அமுதசுரபி. பகல் நேரங்களில் இடைவிடாமல் கேட்கும் குழாயடிக்கும் சத்தமும், தண்ணீரின் சத்தமும், பெண்களின் பேச்சும், விளக்கு வச்சப்புறம் எதுவும் வெளியே கொண்டுபோகக் கூடாது என்ற (அறியா) நம்பிக்கையால் மாலையில்தான் அமைதியாகும்.


பின்னர் நாங்கள் தனி வீடுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. காலப்போக்கில் எல்லார் வீட்டிலும் போர்க்குழாய்கள் வந்துவிட, கடந்த சில வருடங்களாக மோட்டார் போட்டால் தண்ணீர் ஏறாது!! தண்ணீர் இல்லாததால், ஏர் லாக் ஆகிவிட, தண்ணீர் ஊற்றிப் பார்த்துச் சரி வரவில்லையென்றால், ப்ளம்பரைக் கூப்பிட்டு... இப்போ எல்லா வீட்டிலும் நடக்கும் சாதாரண நிகழ்வாகிவிட்டது!! வாய்க்கால் என்ன ஆனதென்று கேட்கிறீர்களா? அது எப்பவோ திருநெல்வேலியின் கூவம் ஆகிவிட்டது!!


நிலத்தடி நீர் வற்றி வரும் நிலையில், அதை வளப்படுத்தும் திட்டங்களைத் தீட்டி,  மேம்படுத்தும் வழிகளையும், மழைநீர் சேகரிப்பையும் அதிகம் ஊக்குவிக்காமல், அரசு தன் பார்வையைத் திருப்பியிருக்கும் இடம் கடல்!! ஆம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்!! சென்னை மீஞ்சூரில் டீ-ஸலைனேஷன் பிளாண்ட் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அடுத்து நெம்மேலியிலும் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் தொடங்கிவிட்டன!!

கடல்நீரை எடுத்து குடிநீராக்குவதில் என்ன பெரிய பாதகங்கள் வந்துவிட முடியும் என்றுதான் தோன்றும்.  உலகமுழுவதும் உள்ள டீ-ஸலைனேஷன் பிளாண்ட்களில் கிட்டத்தட்ட  75% மத்திய கிழக்கு நாடுகளில்தான் உள்ளது. நிலத்தடி நீரோ, மழைநீர் ஆதாரமோ இல்லாத பாலைவனப் பிரதேசங்களான இந்நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் கடலைப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழியாக இருந்தது. அதனால், இவற்றை நிறுவும் செலவு பன்மடங்கு என்றாலும், வளைகுடா நாடுகள் சளைக்காமல் பல ப்ளாண்ட்களை நிறுவின. செலவைக் குறைக்க, கோ-ஜெனரேஷன் எனப்படும், மின் உற்பத்தியும், சுத்திகரிப்பு ஆலையும் ஒன்றாக செயல்படும்படி அமைத்தனர்.



உப்புநீரைக் குடிநீராக்கப் பயன்படுத்தப்படும் காய்ச்சி வடித்தல் முறையும் (Distillation), மீள் சவ்வூடு பரவல் முறையும் (Reverse Osmosis) என்ற இருமுறைகளிலும், கடல்நீரை எடுத்து, தேவைப்படும் வேதிப்பொருட்கள் சேர்த்து, நல்ல நீரைப் பிரித்து, பின் வரும் கழிவு நீரை கடலிலேயே மீண்டும் களையப்படும்.  10 லிட்டர் நீரில், 5லி குடிநீரானால், மீதி 5லி நீரும், 10லிட்டருக்குரிய அடர் உப்புடன் (brine)  இருக்கும்.  இவற்றினால் வரும் பாதகங்களைப் பார்ப்போம்:

1. ஆலை செயல்பாடு: ஆலை செயல்பட அதிக மின்சாரம் மற்றும் முதலீடு  தேவைப்படும். ஆலை செயல்பாடுகளால் ஏற்படும் வெப்பமூட்டுதலும், வெளியேறும் மாசுபட்ட வாயுக்களும் பசுமையில்ல வாயுக்களைப் பாதிப்பதன்மூலம் சுற்றுச்சூழலைக் கேடாக்கும்.

2. ஆலைக்கு நீரை எடுக்கும் இடம் (Intake): அதிக வேகத்தில் நீர் உறிஞ்சப்படுவதால், கடல்வாழ் உயிரினங்களும் சேர்ந்து வந்து மாட்டிக்கொள்ளும் சாத்தியம்.

3. பயன்படுத்திய நீரை வெளியேற்றும் இடம் (Outlet)
a. கழிவுநீர் அதிவேகமாகவும், அதிக வெப்பநிலையிலும், அடர்உப்பாகவும், சேர்க்கப்பட்ட வேதிப் பொருட்கள் (anti-scalants, anti-foaming, anti-corrosion agents), க்ளோரின் மற்றும் பல உலோகங்கள் கலந்தும் இருப்பதால், வெளியேற்றப்படும் இடத்திலும், சுற்றிலும் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்துவிடும்!!

b. அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீரின் உப்பு அடர்த்தியும் அதிகமாக்கப்படுவதால், ஆலை தன் தேவைகளுக்கு மீண்டும் அதே நீரையே உறிஞ்ச நேரிடுவதால் அதிக உற்பத்திச் செலவும்!! 


யூ.ஏ.இ. யின் கடல்நீரின் இயல்பான உப்பு அடர்த்தி (Salinity) முந்தைய காலங்களில் 30,000ppm ஆக இருந்ததாம்; பத்தாண்டுகளுக்கு முன் 45,000ppm ஆக உயர்ந்தது, இந்த வருடம் 56,000ppm ஆகிவிட்டது!! இதிலிருந்து இதன் அபாயம் அறிந்து கொள்ளலாம். இதன் பாதிப்பா அழிஞ்ச பவளப்பாறைகளை (coral reef) இங்கே இப்போ செயற்கையா வளர வைக்க ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்காங்க!!

அதுவுமில்லாம, இங்கே திடீர்திடீர்னு கடற்கரைகள்ல “Red Tide Alert"  என்று செய்தி வரும்!! அதாவது இதன் இன்னொரு பாதிப்பாக Red algae என்ற ஒருவகை பாசி கொத்துகொத்தாகக் கடற்கரைகளில் படரும். அவை நம் உடலில் பட்டா பலவித பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமில்லை, கடல்வாழ் செடிகளுக்கும், மீன் வகைகளுக்கும்கூட ஆபத்து விளைவிக்கக்கூடியவை!!

 ஓரளவு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும் அயல்நாடுகளிலேயே இவ்வளவு பாதிப்புகள் என்றால், தமிழகத்தில்?? மீன் வளம் பாதிப்பதால் மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே காடுகளை அழித்ததன் விளைவாக, ஊருக்குள் யானைகள், புலி, சிறுத்தைகள் வந்து போகின்றன.

இப்படியாக, நமது தேவைகளுக்காக பூமியை, மரம், மிருகங்களை வதைத்துக் கொண்டிருந்த நாம் கடலையும் விட்டு வைக்கவில்லை!! இதெல்லாம் குறைக்க நம்மால் ஆனவற்றை நாம் செய்வது மட்டுமல்லாமல், நம்வீட்டு ஆண்களுக்கும் (ஆமாங்க), குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கணும். பணத்தை எப்படியெல்லாம் பேணுவோமோ, அதேதான் தண்ணீருக்கும்!!

1. சிக்கனமாகச் செலவு செய்தல்;
2. சேமித்து வைத்தல்;
3. வருமானத்துக்குரிய வழிகளைப் பெருக்குதல். (மழைநீர் சேகரிப்பு etc.)


நன்றி ஹூசைனம்மா வலைத்தளம்

No comments: