Wednesday, July 07, 2010

வயதானவர்கள் ஏன் விழுகிறார்கள்?

`முதுமை என்பது ஒருவர் தானே நடமாடித் திரியும் வரை பிரச்சினைக்குரியது அல்ல' உண்மைதான். படுக்கையில் கிடக்க நேரும்போதுதான் முதுமையானது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வயதானவர்களை மோசமாகப் பாதிக்கிறது.


வயதானவர்கள் ஏன் விழுகிறார்கள்? வயதாகும் போது பார்வைத்திறன் குறைகின்றது. கேட்கும் திறன் மந்தமடைகிறது, பாதங்களின் உணர்திறன் குறைவடைகிறது. இதனால் சமநிலை தழும்புகிறது. அத்துடன் உடற் தசைகள் பலவீனம் அடைகின்றன. இவை யாவும், சிறிது தடக்கினாலோ, சறுக்கினாலோ, சமநிலை தழும்பினாலோ இலகுவாக அவர்களை விழச் செய்துவிடுகின்றன.
விழுந்தால் எலும்புகள் முறிவடையக் கூடும். முக்கியமாக இடுப்பு எலும்புகள் முறிவடைவது வயதானவர்களை மிகவும் பாதிக்கும் விடயமாகும்.

அமெரிக்காவில் வருடாந்தம் 13,000 வயோதிபர்கள் வரை விழுவதால் ஏற்படும் மருத்துவப் பிரச்சினைகளால் மரணிக்கிறார்கள். விழுவது தொடர்பான மருத்துவச் செலவாக அமெரிக்க சுகாதார சேவைகளுக்கு வருடாந்தம் 20 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன. இத் தரவுகள் மூலம் வயோதிபர்களின் விழுகையால் தனிநபர்களுக்கும், சமூகத்திற்கும்,அரசாங்கத்திற்கும் ஏற்படும் பளு தெளிவாகிறது அல்லவா?

ஆயினும் விழுதல் என்பது வயோதிபத்தில் தவிர்க்க முடியாதது என்று கருதுவது தவறு. விழுந்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களது நாளாந்த செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது அதை விடத் தவறு. சுறுசுறுப்பாக இயங்கும் வயோதிபர்கள் விழுவது குறைவு என்றே மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

வருடாந்தம் 65 வயதிற்கு மேற்பட்ட 1.8 மில்லியன் வயோதிபர்கள் விழுதல் தொடர்பான காயங்களுக்காக அவசர சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுவதாக வயதானவர்களின் முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார். 

"வீட்டில் உள்ள மாடிப் படி, குளியலறை, நில விரிப்புகள் போன்ற வீட்டுப் பாவனைப் பொருட்களால்தான் இவை ஏற்படுகிறதே ஒழிய வீதியில் இல்லை" என்கிறார் அவர்.
எனவே நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

வீட்டை நன்றாக ஒளியூட்டி வையுங்கள். அதிக வெளிச்சமுள்ள, மேலிருந்து கீழே ஒளி விழக் கூடிய மின் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். இரவிலும் இரவு பல்புகளை ஒளிர விடுங்கள்.
வழுக்காத கால் மிதிகளைப் பயன்படுத்துங்கள். கார்பற், கம்பளம், நில விரிப்புகள் போன்றவை மடிந்து தடுக்கி விழாதவாறு அவற்றை தரையுடன் ஒட்டி வைத்திருங்கள்.
கொம்பியூட்டர், டெலிபோன் மற்றும் மின்சார வயர்களை, நடக்கும் பாதைகளில் தடக்கவிடாது ஒதுக்கி வைத்திருங்கள்.
மாடிப்படிகளில் கை பிடித்து ஏறி இறங்குவதற்கு ஏதுவாக கைபிடிக் கம்பிகளைப் பதித்து வையுங்கள். அதே போல மலசல கூடம், குளியலறை ஆகியவற்றிலும் வழுக்காமல் நடப்பதற்கும், பிடித்து எழும்புவதற்கு ஏதுவாகவும் கைபிடிக் கம்பிகளைப் பதிக்க வேண்டும்.
வயதானவர் படிக்கும் புத்தகங்களையும், சமையலறைப் பொருட்களையும் அவருக்கு இலகுவாக எட்டும் உயரத்தில் வைத்திருங்கள். உயரத்தில் ஏறிப் பொருட்களை எடுக்க முனைந்தால் அவர் தவறி விழுந்துவிடக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

No comments: