Friday, August 28, 2009
டெல்லி: 1998ம் ஆண்டு போக்ரானி்ல் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை வெற்றி பெறவில்லை என்று அந்த சோதனையை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானி டாக்டர் கே.சந்தானம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால், இதை முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு குண்டு சோதனை நடத்திய குழுவுக்கு தலைமை வகித்தவருமான அப்துல் கலாம் மறுத்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப் பகுதியி்ல் இந்த அணு குண்டு சோதனையை அப்போதைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் தலைமையிலான குழு நடத்தியது.
மே 11, மே 13 என இரு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒன்று 'தெர்மோ நியூக்ளியர் பாம்' எனப்படும் 'ஹைட்ரஜன் குண்டு'. ('nuclear fusion' எனப்படும் அணுக்களை இணைப்பதன் மூலம் வெடிக்கும் குண்டு இது, மற்ற 4 குண்டுகளும் 'nuclear fission' எனப்படும் அணு பிளப்பை அடிப்படையாகக் கொண்டவை).
ஆனால், இதில் இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி பெறவில்லை என்று சந்தானம் இப்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டி.ஆர்.டி.ஓவின் சார்பில் அந்த குண்டு சோதனையின் திட்ட இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோதனை நடத்தப்பட்ட இடத்தை தேர்வு செய்து அதை தயார் செய்தவரும் இவரே.
அங்கு நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையே ஹைட்ரஜன் பாம் சோதனை தான். இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் 43 முதல் 45 கிலோ டன் சக்தி வெளிப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு சக்தி வெளிப்பட்டதாக இந்தியாவும் கூறியது.
ஆனால், இந்த குண்டுவெடிப்பை கணக்கிட்ட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் புவியியல் ஆய்வு மையங்கள் அவ்வளவு சக்தி வெளியாகவில்லை என்று அப்போதே கூறின. ஆனால், அதை அப்போதும் இந்தியா மறுத்தது.
(மே 11ல் நடத்தப்பட்ட 3 அணு குண்டு சோதனைகளையும் சேர்த்து மொத்தமே 10 முதல் 15 கிலோ டன் சக்தி தான் வெளிப்பட்டதாக அமெரிக்கா கூறியது குறிப்பிடத்தக்கது. இதாவது பரவாயில்லை, மே 13ம் தேதி இந்தியா நடத்திய 2 அணு குண்டு சோதனைகள் நடக்கவேயில்லை என்றும் அமெரிக்கா கூறியது. இன்னொரு விஷயம்.. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை நடத்தியது. 6 குண்டுகளை சோதித்ததாகக் கூறியது. அதில் 2 மட்டும் தான் அணுகுண்டுகளாம்.. மற்ற 4 குண்டுகளும் வெறும் 'டுபாக்கூர்' என்கிறது அமெரிக்கா).
இந் நிலையில் தான் அந்தச் சோதனை தோல்வி அடைந்ததாக சந்தானம் இப்போது அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், சோதனை முடிவுகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பது சோதனை நடத்திய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தெரியும். இதனால் இந்தியா அவசரப்பட்டு அணு குண்டு பரிசோதனைக்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear Test Ban Treaty-'சி.டி.பி.டி) கையெழுத்து போட்டுவிடக் கூடாது என்றார்.
இதன்மூலம் இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்று சந்தானம் கோரியுள்ளார்.
சந்தானம் சொல்வது உண்மையாக இருந்தால் தனது அணுகுண்டு சோதனைகள் குறித்து இந்தியா அப்போது மக்களுக்கு தவறான தகவல் தந்துள்ளது உறுதியாகிறது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்ததையடுத்து இந்தியாவுக்கு எரிபொருள் தர பல நாடுகள் முன் வந்தாலும் சி.டி.பி.டியில் கையெழுத்திடுமாறு இந்தியாவுக்கு நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் மத்திய அரசு விரைவிலேயே கையெழுத்திடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதனால் தான் சந்தானம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளதாகத் தெரிகிறது. நாம் இன்னும் முழுமையான ஹைட்ரஜன் அணு குண்டு தயாரிக்கும் திறனைப் பெறாத சூழலில் இதில் கையெழுத்துப் போட்டுவிட்டால் எதிர்காலத்தில் சோதனைகள் நடத்த முடியாமல் போவதோடு நமது அணு சக்தித் திறனை மேம்படுத்தவும் வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பது சந்தானத்தின் வாதம். (அடுத்த வாரம் சிடிபிடி குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது)
அப்துல் கலாம் மறுப்பு:
இது குறித்து டாக்டர் அப்துல் கலாம் கூறுகையில், நாம் நடத்திய சோதனைகள் எதிர்பார்த்த பலனைத் தந்தன. அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். அந்த சோதனைகள் முழு வெற்றி பெற்றன.
சோதனைகள் நடத்தப்பட்டபோது பதிவான நில அதிர்வுகள் தொடர்பான டேட்டா, குண்டு வெடிப்பு நடத்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சொல்கிறேன்.. அந்தச் சோதனைகள் முழு அளவில் வெற்றி பெற்றன. சோதனைகளில் நாங்கள் நினைத்த அளவுக்கு சக்தி உண்டானது என்றார்.
ஆர்.சிதம்பரமும் மறுப்பு:
அந்த சோதனைகள் நடத்தியதில் மிக முக்கிய பங்கு வகித்தவரான இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.சிதம்பரம் கூறுகையில், சந்தானத்தின் கருத்து அறிவியல்பூர்வமாக தவறானது, மோசமானது.
தனது கருத்துக்கு வலு சேர்க்க சந்தானம் ஏதாவது புதிய டேட்டா வைத்திருக்கிறாரா?. அவர் ஒரு விஞ்ஞானி என்ற வகையில் ஆதாரம் இல்லாமல் இல்லாமல், லாஜிக் இல்லாமல் எதையும் கூறக் கூடாது. அவரிடம் இது தொடர்பாக எங்களுக்குத் தெரியாத ஏதாவது விவரங்கள் இருந்தால் அதைத் தரலாம். அதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.
ஹைட்ரஜன் பாமை வெடிக்கச் செய்ய 14 MeV அளவுக்கு நியூட்ரான்கள் உருவாக வேண்டும். அப்போது நடந்த சோதனையின் முடிவில் 14 MeV நியூட்ரான்கள் உருவானது உறுதியானது. அப்படியிருக்க சோதனை தோல்வி என்று எதை வைத்துச் சொல்கிறார் சந்தானம்? என்று கேட்டுள்ளார் சிதம்பரம் .
சந்தானத்தை பயன்படுத்துகிறதா அரசு?:
இந் நிலையில் சந்தானம் மூலம் சந்தேகங்களைக் கிளப்பி மேலும் சில அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இந்தியா தயாராகி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.
சிடிபிடியில் கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா நெருக்கப்படுவதால், அதற்கு முன் தனது அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்தும் வகையில் சோதனைகள் நடத்த திட்டமிடுகிறது இந்தியா.
இதற்காகத் தான் சந்தானம் மூலம் இந்த சந்தேகத்தை இந்தியாவே கிளப்பிவிட்டு வருகிறது என்று வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான என்பிஇசியின் நிர்வாக இயக்குனர் ஹென்ரி சோகோல்ஸ்கி கூறியுள்ளார்.
சிடிபியியில் கையெழுத்திடுவதைத் தவி்ர்க்கவே இந்தியா இதைச் செய்வதாகவும் சில அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன. கையெழுத்திடுமாறு நெருக்கினால் மீண்டும் சோதனை நடத்துவோம் என்பதைத் தான் இந்தியா, சந்தானம் மூலமாக கூறுகிறது என்கிறார்கள்.
இதனால் சிடிபிடி விஷயத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா விட்டுக் கொடுத்து நடக்க வேண்டி வரலாம் என்கிறார்கள்.
Wednesday, August 26, 2009
விவசாயத்தில் தலையாய பிரச்னைகள் நிறைய உள்ளன. இன்று விவசாயிகளே அழிந்து வருகின்றனர். விவசாயமே தெரியாத பல தொழிலதிபர்கள், லகரத்தில் சம்பளம் வாங்கும் மென்பொருள் கணினிப் பொறியாளர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தினர் இத்தகையோர் தமிழ்நாட்டு கிராமங்களில் விவசாய நிலங்களை என்ன விலை கொடுத்தாவது வாங்கி அவற்றை அப்படியே அசையாச் சொத்தாக வளைத்துப் போட்டுவைக்கும் போக்கு நாளுக்குநாள் அதிகமாகிறது.
பாரம்பரியமாக விவசாயம் செய்து வருபவர்கள் இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இன்று விவசாயம் வருமானம் தரக்கூடியதாக இல்லை. இன்னமும் விவசாயிகள் கடனில்தான் வாழ்கின்றனர். பெரும் வருமானத்தில் கணிசமான பகுதி வட்டிகட்டவே செலவாகிறது. கள் / பதனீர் இறக்கும் அனுமதிக்கு விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கு எதுவும் சட்டம் கொண்டுவரப்படவில்லை.
விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ""தின்பதற்கு அவல் கேட்டால் உரலை இடி'' என்ற கதையாக விவசாயத்தை மேலும் நஷ்டப்படுத்த, இந்தத் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்று சட்டம் என்ற மசோதாவை 23}6}2009ல் அறிமுகம் செய்து மறுநாளே எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்த விவசாய அனுபவமே இல்லாத ஏட்டுச்சுரைக்காய் பட்டதாரிகள் - அதாவது வேளாண்மையைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரிகளை வேளாண்மை நிபுணர்களாகப் பதிவு செய்து கொண்டு, அவர்களுக்கு மட்டுமே விவசாயிகளுக்குக் கற்றுத்தரும் உரிமையை வழங்க, இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
""பதிவுபெறாத எந்த ஒரு நபரும் தமிழ்நாட்டுக்குள் வேளாண்மை ஆலோசகராகத் தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப் பணிகளை ஆற்றுவதோ கூடாது. பதிவுபெற்ற பட்டதாரிகள் மட்டுமே விவசாயம் தொடர்பாக எல்லா தொழில்நுட்பங்கள், உழவியல் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.''
இச்சட்ட திட்டங்களை மீறுவோர்கள், அதாவது பதிவுபெறாதவர்கள், விவசாயிகளிடம் ஆலோசனைகூறி முதல்முறை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம். இரண்டாவது முறை குற்றவாளிக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம்.எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் நம்மாழ்வார், சுந்தரராமன், அந்தோணிசாமி, கோமதிநாயகம், கோ. சித்தர், உடுமலை செல்வராஜ், கட்டுரையாசிரியர் ஆர்.எஸ். நாராயணன் போன்ற நூற்றுக்கணக்கான முன்னோடிகளுக்குச் சிறைத்தண்டனை காத்திருக்கிறது. அபராதங்கள் காத்திருக்கின்றன.
மசோதாவின்படி விவசாயிகளுக்கு ஆலோசனை கூற தகுதியுள்ள தமிழ்நாடு வேளாண்மை மன்றம் மொத்தம் 29 உறுப்பினர்களைக் கொண்டது. பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளில் 20, த.நா. வேளாண்மை பல்கலையிலிருந்து 5 பேராசிரியர்கள், அரசு நியமன உறுப்பினர்கள் 4. அது என்ன 29 என்ற கணக்கு? பாட்டா செருப்பு விலை மாதிரியா? முப்பதோ அல்லது நாற்பதோ வைத்துக் கொள்ளுங்கள். இந்த மன்றம் யோசனைகூறி அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்போது இப்படித் தவறான யோசனை கூறிய பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளுக்கு வழங்கவேண்டிய தண்டனைபற்றி இந்தச் சட்டத்தில் இடம் இல்லாதது ஒரு பெருங்குறைதான். இனிமேல் விவசாயத்தைக் கெடுக்க என்ன மிஞ்சியுள்ளது?
இந்த வேளாண்மை மன்றத்தை இயக்கப்போகும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும், வேளாண் துறையும் கடந்த 40 ஆண்டுகளில் செய்துவந்த கொடுமை, துரோகம் ஆகியவற்றுக்குத் தண்டனை உள்ளதா? பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு மண்ணில் உள்ள கோடிக்கணக்கான மண் புழுக்களையும், பில்லியன் பில்லியன் அளவில் நுண்ணுயிரிகளையும் கொன்று குவித்துள்ளனர்.
உண்ணும் விளைபொருள்கள் மீது விஷமான பூச்சி மருந்துகளை அடித்து உண்ணும் உணவு விஷம்; தண்ணீர் விஷம்; மூச்சுக்காற்று விஷம்; இப்படியெல்லாம் சூழலைக் கெடுத்துப் போதிய விளைச்சல் இல்லாமல் கடனில் மூழ்கி, வாழ வழி இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய பல்கலைக்கழக வேளாண் போதகர்களுக்கு என்ன தண்டனை தருவது? இவையெல்லாம் போதவில்லையா? இவர்கள் செய்துள்ள வேளாண் கொடுமைகளுக்கு ஒரு பரிசாக தமிழ்நாடு அரசு "வேளாண்மை மன்றத்தை' வழங்கியுள்ளதை விவசாயிகள் நிராகரிப்பது நிச்சயமான உண்மை.
அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. விவசாய சங்கத் தலைவர்களுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. இந்த மன்றத்தின் யோசனையைக் கேட்டு எந்த விவசாயியும் பயிரேற்றப் போவதில்லை. ஏனெனில் விவசாயத்தைப் பொறுத்தவரை ஏட்டுச்சுரைக்காய்ப் பட்டதாரிகளால் எதையும் சாதிக்க முடியாது. பட்டறிவு, பாரம்பரிய அறிவு, விவசாயிகளின் அறிவுப் பரிமாற்றங்கள் சாதிக்கக்கூடியதை இந்த மன்றத்தால் சாதிக்க இயலுமா?
வேளாண்மை செழிக்க யார் யாரிடம், எவ்வாறு பாடம் கேட்பது; எவ்வாறு கற்பிப்பது என்ற கேள்விகள் வரும்போது இரண்டு மறைந்த மகாமேதைகள் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் இந்தியர். மற்றொருவர் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். யார் அந்த இந்தியர்? அவர்தான் எஸ்.ஏ. தபோல்கர். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தியவாதி. கணிதப் பேராசிரியர். விவசாயத்தில் பட்டதாரி இல்லை. மண்ணியலில் இவர் பெற்ற நிபுணத்துவம், இவரை ஒரு நர்ண்ப் இட்ங்ம்ண்ள்ற் என்று கூற வைத்தது. இவர் படைத்தது . சூரிய அறுவடையை ஒழுங்காகச் செய்தால் எல்லோருக்கும் எல்லாமும் உண்டு என்றவர். காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
இவருடைய தாரக மந்திரம் ""விஸ்வம் புஷ்டம் கிராமே அஸ்மின் அனாதுரம்'' இது ரிக் வேதத்தில் உள்ளது. இதன் பொருள், ""உலக மக்கள் நலமாய் வாழ நாம் வாழும் இடங்களில் (கிராமங்களில்) ஏராளமாக உணவைப் பெற முடியும்''.
வேளாண் கல்விக்கு தபோல்கர் மூன்று வழிகளைக் கூறுகிறார்.
1. ஸ்வாத்யாயம்: அதாவது தன்னறிவு, தன்னைத்தானே தயார் செய்துகொள்ளும் கல்வி,
2. ஸ்வாஸ்ரேயம்: அதாவது தன் கையே தனக்குதவி. தற்சார்பு நிலை.
3. பிரயோக்பரிவார்: பலர் ஒன்று சேர்ந்தும் சேராமலும், பெற்ற கல்வியைப்
பகிர்ந்து கொண்டு பயன்பெறுதல். இந்தப் பிரயோக்பரிவார் அமைப்பில் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற தன்னறிவை மற்றவர்கள் பயனுக்காக எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட உழவியல் நுட்பத்தினால் கூடுதல் மகசூல் பெற்றால் அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இந்த அடிப்படையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர். மாடித் தோட்டங்களை உருவாக்கியவர். பழத்தோட்டங்களை உருவாக்கியவர். மண்ணில் உள்ள விஷத்தைப் போக்கி நுண்ணூட்டங்களை மண்ணில் உருவாக்கி வளப்படுத்த பல தானிய விதைகளை விதைத்துப் பசுந்தழைகளை மடித்து உழும் ஒரு தொழில்நுட்பம் விவசாயிகளின் கருத்துப் பரிமாற்றத்தால் விளைந்ததுவே, இதற்குத் தபோல்கரின் பிரயோக் பரிவார் காரணம்.
கற்பதிலும் கற்பிப்பதிலும் தலைசிறந்த முன்னுதாரணம் ""வேளாண்மை உயில்'' என்ற காவியத்தைப் படைத்த ஆல்பர்ட் ஹோவார்ட் ஆவார். இவர் அன்று இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சான் கேட்டுக்கொண்டதன் விளைவால் லண்டன் ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர் அமைப்பு, இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தும் பொருட்டு, 1905-ம் ஆண்டு ஆல்பர்ட் ஹோவார்டை இந்தியாவுக்கு அனுப்பியது. புசா என்ற இடத்தில் அவருக்குப் பதவியும், சோதனை இடமாக 90 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.
எவ்விதமான ரசாயனமும் இல்லாமல் இந்திய விவசாயிகள் கடைப்பிடிக்கும் உழவியல் நுட்பங்களைக் கண்டு ஹோவார்ட் வியந்தார். இந்திய விவசாயிகளிடம் பாடங்கள் கற்க விரும்பினார். விவசாயிகளைப் புசாவுக்கு அழைத்து, விவசாயிகளை ஆசான்களாக கௌரவித்து ஆசிரியர்கள் அமர வேண்டிய நாற்காலிகளில் உட்கார வைத்து, தான் தரையில் அமர்ந்துகொண்டு துபாஷி (மொழி பெயர்ப்பாளர்) உதவியுடன் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.
"வேளாண்மை உயில்' என்ற தனது நூலில் ஹோவார்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்: ""இந்திய விவசாயிகள் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த யாரும் ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தவில்லை. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். பூச்சிக்கோ நோய்க்கோ விவசாயிகள் நஞ்சு தெளிக்காமல் இருப்பதைக் கண்டு வியப்புற்றேன். பொருத்தம் இல்லாத பயிர் ரகம், சாகுபடி முறை எவை என்பதைப் பூச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. நோய் இயல் நிபுணர், பூச்சியியல் நிபுணர், பாக்டீரியா நிபுணர், வேதியியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர் உதவியில்லாமல் ஆரோக்கியமாக விவசாயம் செய்வது எப்படி என்று விவசாயிகளிடம் கற்றுக்கொண்டேன்''
1935-ல் ஹோவார்டு இங்கிலாந்து திரும்பி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்டவர். பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் இவரைக் குருவாக மதித்துப் பின்பற்றினர்.
""காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்ற கவிஞரின் பாட்டுக்கு ஏற்ப இந்தியாவுக்கு நவீன விவசாயம் கற்றுக் கொடுக்க வந்தவர் இங்குள்ள விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு ""வேளாண் உயில்'' என்ற நூலைப் படைத்தார். அது வேளாண்மைக்கே உயிர். அந்த நூலில் ஒரு பொன்னான வரி உண்டு: ""பூமியின் வளம் என்பது வங்கிக்கணக்குப் புத்தகம் அல்ல. எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் கணக்கு வைக்க முடியாது...'' மண்ணிலிருந்து நாம் சுரண்டி எடுத்தது அதிகம். கொடுத்தது குறைவு. எடுக்கப்பட்டவை உலக வங்கிக்கடனை விடவும் அதிகம். எடுத்தவற்றை ஈடு செய்யப் பஞ்சகவ்யம், மண்புழு எரு, பல்வேறு குணபங்கள், உலர் மூடாக்கு, பசுந்தாள் உரம் கொண்டுதான் இழந்த வளத்தை மீட்க வேண்டும். அன்று இயற்கை விவசாயத்திற்குச் சோதனைக்கூடமாக விளங்கிய புசா, இன்று நவீன ரசாயனம் போதிக்கும் ஐய்க்ண்ஹய் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ஆக வளர்ந்துள்ளது. இன்று இந்தியாவில் செம்மை நெல் சாகுபடி என்ற பெயரில் ""ஒற்றை நாற்று நடவு'' பிரபலமாகிவிட்டது. ஆனால் இதைக் கண்டுபிடித்தது பிரயோக் பரிவார் முறையில் மடகாஸ்கர் விவசாயிகளின் கூட்டுமுயற்சி ஆகும்.
கடந்த 40 ஆண்டுகளாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் மண்வளத்தைக் கெடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, இன்று உணவு இறக்குமதி செய்யும் அளவில் விவசாயத்தையே கேவலமாக்கி, பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குக் காட்டிக் கொடுத்து விவசாயத்தை மானம் இழக்கச் செய்த எட்டப்ப ஏட்டுச்சுரைக்காய் விவசாயப் பட்டதாரிகளுக்கு இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தான் கற்காத ஒன்றை விவசாயிகளுக்கு கற்பிக்கும் தகுதி உள்ளதா? என்று அவர்கள் தங்களின் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துச் சொல்லட்டும்.
மண்ணை வளப்படுத்தும் ஒரு விவசாயத்தை, வளங்குன்றா வேளாண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஒரு தகுதி இயற்கை விவசாய முன்னோடிகளுக்கு மட்டுமே உண்டு. தொல்சிறப்புள்ள இந்திய விவசாயத்தை அழிக்க முயலும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டை ஒரு சோதனைக்கூட எலியாகப் பயன்படுத்த இந்த வேளாண்மைச் சட்டத்தைத் திணிக்க முயல்வதை, வேரோடு களைவோம்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
Sunday, August 23, 2009
Subscribe to:
Posts (Atom)