Friday, April 15, 2011

 உஷாரய்யா... உஷாரு... உங்கள் விலை 11 காசு

வாக்காளர்களே, தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாளான இன்று, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் அதிகரித்து விட்டது.
ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்கும் அரசியல்வாதிகள், பொதுமக்களை பிச்சைக்காரர்களை விட கேவலமான நிலைக்கு தள்ளி உள்ளனர்.
200 ரூபாய் கொடுத்து ஒட்டை விலைக்கு வாங்கும் அரசியல் வாதிகள் நாளொன்றுக்கு 11 காசு என்ற அளவிலேயே உங்களுக்கு விலை நிர்ணயித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.தமிழகத்தில் சில நாட்களாக, ஓட்டுக்கு, 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை, சர்வ சாதாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, சில தொகுதிகளில் வீட்டு உபயோகப் பொருட்கள், தங்கம் உட்பட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.தேர்தல் கமிஷன் என்ன தான் கிடுக்கிப்பிடி போட்டாலும், அதையும் தாண்டி, பணப் பட்டுவாடா கனஜோராக நடந்து வருகிறது. இவ்வளவு பணம் வழங்கும் அரசியல் கட்சியினரால் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள், நமது வரிப்பணத்தில் அனுபவிக்கும் சலு கையோ ஏராளம்.

ஆனால், அவர்கள், நமது வாக்குக்கு நிர்ணயித்துள்ள விலையோ பரிதாபம். இன்று நம்மால் தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ.,வுக்கு, மாதத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் சம்பளம், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாளில், 1,000 ரூபாய்க்கு குறையாத படி, பஸ்சில் ஓசி பயணம், அரசு விழாக்கள் மட்டுமின்றி அனைத்திலும் முன்னுரிமை, சென்னையில் வசிக்க வீடு என சலுகைகள் நீள்கின்றன.

இதை எல்லாம் தாண்டி, தொகுதியில் சமூக விரோதிகளின் செயலுக்கு அனுமதி அளித்தால், கணக்கில் வராத கவனிப்புகளும் உண்டு. எம்.எல்.ஏ.,வின் நிலை இது என்றால், அமைச்சர்களின் காட்டில் இதை விட பல மடங்கு பணம், சலுகை மழை பொழிகிறது. இத்தனை சலுகைகளை பறிக்கும் வேட்பாளர்கள், நமது ஓட்டுக்கு நிர்ணயித்துள்ள விலை, பிச்சைக்காரர்கள் கூட வாங்கமாட்டார்கள்.
விலை மதிப்பில்லாத ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்கி வெற்றி பெறுவோர், ஐந்து ஆண்டு (லீப் ஆண்டு சேர்ந்து) 1,826 நாள் பதவி வகிக்கின்றனர். இந்த நாளில் பதவிகளை இவர்கள் அலங்கரிக்க, இவர்கள் வாக்காளர்களுக்கு வழங்கும் பணத்தை கொண்டு கணக்கிட்டால், நாள் ஒன்றுக்கு நமக்கு, 5.5 காசு முதல், 27 காசு வரை வழங்கப்படுவது தெரிய வந்தது.

இதே கணக்கீட்டில், அவர்கள் கொடுக்கும் பொருட்களை கணக்கிட்டாலும், நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான பணமே ஓட்டுக்கு வழங்கப்படுகிறது. பொது இடங்களில், "வயிற்றுக்காக யாசிக்கும்' பிச்சைக்காரர்கள் கூட, ஒரு ரூபாய்க்கு குறைவாக வழங்கினால், ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்; தூக்கி எறிகின்றனர்.
ஆனால், அரசியல் கட்சியினர், வாக்காளர்களை, பிச்சைக்காரர்களை விட குறைவாக மதிப்பிட்டு பணம் வழங்குகின்றனர். வாக்காளர்ளே சிந்திப்பீர்...ஓட்டுக்கு பணம் தேவையா?அரசியல் வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவீர்.இன்று மறவாமல் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்!

நன்றி  தினமலர்

1 comment:

fuel digital vignesh said...

Great article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs


Digital marketing agency in chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Best seo analytics in chennai
Expert logo designers of chennai
Brand makers in chennai