Monday, March 22, 2010
பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். ஆனால் புலன் உணர்வுகளைக் கொண்டு "அறிவியல்" அறிவைத் தான் வளர்த்துக் கொள்ள இயலுமே தவிர புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட "அறிவைப்" பெற்றுக் கொண்டிட இயலாது.
புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த "அறிவியல் அறிவு" கூட எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை தெரியுமா? - இதோ கேள்வி-பதில்:
"மனிதா! நீ எப்படி அறிவைப் பெறுகிறாய்?"
"என் கண்களால் நான் பார்க்கிறேன். அதனால் அறிந்து கொள்கிறேன்."
"உன் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளும் விஷயத்தில் உனக்கு சந்தேகமே கிடையாதே?"
" என் கண்களால் நானே பார்ப்பதை நான் ஏன் சந்தேகிக்க வேண்டும்?"
"அப்படியானால் 'கானல் நீருக்கு' நீ என்ன விளக்கம் சொல்கிறாய்? கண்ணுக்கு எதிரே இல்லாத நீரை உன் கண்கள் எப்படிக் காட்டியது?"
நண்பனே! உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்! அதனால் தான் சொன்னார்களோ - "கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்" - என்று!
விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?
ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?
அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?
அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?
"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே! அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.
"The world of science should be like a classical free enterprise market place, with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...." "விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு "கிராக்கி" ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே! நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் "வியாபாரப் பொருட்களா"? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் "விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?
ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற "வாடிக்கையாளர்கள்" தான்!
இது இப்படி இருக்க - என்னைப் படைத்தது யார்? நான் படைக்கப் பட்டதன் நோக்கம் என்ன? நமது துவக்கமும் முடிவும் என்ன? - என்பன போன்ற வாழ்வியல் கேள்விகளுக்கான விடைகளை இயற்பியல் ஆய்வுக் கூடத்திலோ வேதியியல் ஆய்வுக் கூடத்திலோ ஆய்வு செய்து கண்டு பிடித்து விட இயலுமா?
எனவே தான் சொல்கிறோம். அறிவு இரண்டு வகைப் படும்.
ஒன்று - புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.
இரண்டு - புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவு என்பது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைச் சார்ந்தது.
என்வே - வாழ்க்கை சம்பந்தமான தெளிவான அறிவை -
ஆளுக்கொரு கருத்தினை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் மூலமாகவோ
ஐம்புலன்களை மட்டுமே நம்பி செயல் படுகின்ற அறிவியலாளர்கள் மூலமாகவோ
பெற்றுக் கொண்டு விட முடியாது!
அப்படியானால் - வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவை, அதாவ்து புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவை நாம் பெறுவது எங்கனம்?
இறைவனை நம்ப மறுக்கின்ற நாத்திகர்களுக்கு வாழ்க்கை என்பதே ஒரு விபத்துத் தான். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்பவர்களுக்கு - புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் அந்த இறைவனே என்பதைப் புரிந்து கொள்வதில் எந்த வித சிரமமும் இருக்கப் போவதில்லை. ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக் காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான் அறிவைப் பெற்றும் கொள்ள முடியம்?
நன்றி CounselorMansoor
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment